ஒடிசாவில் அதிர்ச்சி... பள்ளி சீருடையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் மீட்பு!
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில், பள்ளி சீருடையில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமிகள் இரண்டு நாட்களாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த, எம்வி 74 கிராமத்தைச் சேர்ந்த டினார் ஹால்தாரின் மகள் ஜோதி ஹால்தார் (13) மற்றும் எம்வி 126 கிராமத்தைச் சேர்ந்த பாகா சோடியின் மகள் மந்திரா சோடி (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் உள்ளூரில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த வியாழக்கிழமையன்று பள்ளி முடிந்து சிறுமிகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இரு குடும்பத்தினரும் சிறுமிகளை தேடியுள்ளனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று மந்திரா சோடியின் தாயார் மம்தா சோடி, எம்வி 79 காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டில் உள்ள ஒரு மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு உடல்களையும் உள்ளூர்வாசிகள் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.