பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!
பாம்பன் ரயில் தூக்கு பால பணிகளுக்காக அவ்வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் கடலில் 1914 ஆம் ஆண்டு சுமார் 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாம்பன் ரயில் பாலம் தான் இந்தியாவின் முதல் மற்றும் மிக நீளமான கடல் பாலமாக உள்ளது. இந்த பாலம் கப்பல்கள் செல்வது செல்வதற்கு ஏதுவாக தூக்கு பாலத்தையும் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பாலத்தில் துருப்பிடிக்க துவங்கியதால் இரும்பு கர்டர்கள் சேதமடைந்து பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாம்பனின் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது.
இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ராமேஸ்வரம் வரை செல்ல வேண்டிய ரயில்கள் தற்போது மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளது இதற்காக பாலத்தின் நடுவே இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் உள்ளிட்டவை கடந்து செல்ல தடை விதிக்கப்படுவதாக ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.