#Indonesia-வில் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் இன்று 30 பயணிகளுடன் படகு ஒன்று கடலில் சென்றுக்கொண்டிருந்தது. செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் படகு சென்றபோது எதிர்பாராத விதமாக நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்க விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் துருதிஷ்டவசமாக 8 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா கூறுகையில், "உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது" என்றார். கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.