மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேரின் உடல்கள் மீட்பு!
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மடாதிலா அணையில் உள்ள ஒரு தீவில் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்காக மடாதிலா அணையில் நேற்று (மார்ச் 18) மாலை 15 பேர் படகில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கிராம மக்களின் உதவியுடன் 8 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், 7 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில், நீரில் மூழ்கி மாயமான 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (மார்ச் 19) மீட்கப்பட்டுள்ளனர். இதில் 3 குழந்தைகள் அடங்குவர். காணாமல் போன 15 வயது சிறுமியைத் தேடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கன்ஹா (7), சிவா (8), சாயா (14), ராம்தேவி (35), லீலா (40) மற்றும் சாரதா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த ராம்தேவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "படகின் கீழே இருந்து தண்ணீர் நுழையத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் படகு ஒரு பக்கமாக சாய்ந்தது. எனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், தண்ணீரில் எனது கைகளையும் கால்களையும் அசைக்கத் தொடங்கினேன். சரியான நேரத்தில் என்னைக் காப்பாற்ற படகு ஒன்று வந்தது" என்றார்.