“ரத்தம் பாயும்...” - சிந்து நதி விவகாரத்தில் பாக். அரசியல் கட்சித் தலைவர் மிரட்டல்!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு நீர் பகிர்ந்துகொடுக்கும் சிந்து நதி ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ததது. மேலும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவின் இந்த தொடர் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதற்கு பதில் தரும் வகையில், சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க தடை, இந்தியாவுடனான வர்த்தக நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
இரு நாடுகளிடையேயான இந்த நடவடிக்கைகள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர், தாக்குதலுக்கு ஆதரம் இருந்தால் இந்தியா அதை உலகுக்கு காட்ட வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறினார். இதனிடையே தற்காப்புக்காக தனது ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி
சிந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியர்களின் ரத்தம் சிந்துவில் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார், இது தொடர்பாக அக்கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “சிந்து நதி எங்களுடையது, அது எங்களுடையதாகவே இருக்கும். எங்களுக்கு சொந்தமான தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் (இந்தியர்களின்) ரத்தம் பாயும்” என்று கூறியுள்ளார்.