For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியர்கள் என்ற உணர்வோடு ரத்தம் கொதிக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!

அமெரிக்காவில் இருந்து கைவிலங்கோடு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:11 PM Feb 06, 2025 IST | Web Editor
 இந்தியர்கள் என்ற உணர்வோடு ரத்தம் கொதிக்கிறது    அமைச்சர் டி ஆர் பி ராஜா கண்டனம்
Advertisement

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா,  சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை 'சி-17'  என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது.

Advertisement

டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்ட 'சி-17' அமெரிக்க ராணுவ விமானம், நேற்று மதியம் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு பூடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?அவர்கள் எல்லாருமே குஜராத் ராஜஸ்தான் ஹரியானாவை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள். இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!

இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களை போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க மத்திய அரசுக்கு எப்படி மனம் வருகிறது? அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அது கூடவா முடியாது?"

இவ்வாறு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement