சென்னை பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் - அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது!
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், சென்னை பல்லவன் மத்திய பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக இன்றும் நடந்து வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும், இன்று (ஜன. 10) பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை இணை ஆணையர் தர்மராஜன் மேற்பார்வையில் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் பல்லவன் இல்லத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொழிற்சங்கங்களை சார்ந்த 400 க்கும் மேற்பட்டோர் இரு குழுவாக முற்றுகை போராட்டமும், கோரிக்கை முழக்க போராட்டமும் நடத்தினர். இவர்கள் அனைவரும் பல்லவன் இல்லம் நோக்கி கூட்டாக பேரணியாக வந்தனர்.
இந்நிலையில் பல்லவன் பணிமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தடுப்புகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள அண்ணா அரங்கம் அழைத்து செல்லப்பட்டனர்.