நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் - சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாளை (ஜன. 10) சென்னையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் அனைத்து பணிமனைகளிலும் நாளை மறியல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்தன்.
இதன் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசு சார்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாத்தையடுத்து இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தது.
இந்நிலையில், சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,
“கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். நாளை சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு நாளை காலை 10 மணிக்கு மேல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய பேருந்து நிலையங்களிலும் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.