போக்குவரத்து தொழிலாளர்களின் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் கைது!
2-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக இன்றும் நடந்து வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும், இன்று (ஜன. 10) பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிமனைகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 அம்ச கோரிக்கைகளில் பொங்கலுக்கு முன்பாக முதற்கட்டமாக அகவிலைப்படி 4 மாத தொகையை வழங்க போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கைது:
சென்னை:
இந்நிலையில் சென்னை பல்லவன் பணிமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தடுப்புகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வாலாஜா சாலையில் உள்ள அண்ணா அரங்கம் அழைத்து செல்லப்பட்டனர்.
ஈரோடு
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளை இயக்கவிடாமல் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்
கடலூரில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாரதி சாலையில் பேரணி செல்ல முயன்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று அரசு கூறுவதாகவும் ஆகவே அரசுக்கு பிச்சை எடுத்து நிதி திரட்டுவதாக கூறி போராட்டம் நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அண்ணா தொழிற்சங்கத்தினர் விலகி நின்றனர்.
திருச்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பாக சுமார் 200க்கும் அதிகமான போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டாத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல் மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தொழிலாளர்கள் பேருந்து நிலைய பகுதியில் ஊர்வலம் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.