இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!
இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரின் மனைவி விசாலாட்சி. இவர்கள் இருவருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால், இவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாகப் பயணம் மேற்கொள்வதற்காக சமூக நலத்துறையால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயண அட்டையை வைத்து வேலூருக்கு வேலை நிமித்தமாக வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்த சூழலில் ராமதாஸ் - விசாலாட்சி தம்பதி நேற்று முன்தினம் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர். இவர்கள் பேருந்தில் ஏறும்போதே நடத்துனர் முகம் சுளித்தபடி கடிந்த பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து பள்ளிகொண்டா நிறுத்தம் வந்ததும் இந்த தம்பதி இறங்க முயன்றனர். அவர்கள் இறங்குவதற்குள்ளே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பார்வையற்ற இருவரும் நிலைதடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து தம்பதியை மீட்டனர். கீழே விழுந்ததில் பார்வையற்ற தம்பதிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. பொதுமக்கள் இது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் அலட்சியமாக பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணயத்தில் வைரலானது.
தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் கணபதி இது குறித்து விசாரணை நடத்தினாா். இந்த விசாரணையில், பாா்வையற்ற தம்பதி இறங்குவதற்குள் பேருந்து இயக்கப்பட்டதும், அதனால் அவா்கள் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. பின்னர், அரசுப் பேருந்து ஓட்டுநா் செந்தில், நடத்துநா் பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் கணபதி உத்தரவிட்டாா்.