பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... #INDvsNZ 1st Test இன்று தொடக்கம்!
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது.
இந்தியா - நியூஸிலாந்து இரு அணிகளும் இதுவரை 62 டெஸ்ட்டுகளில் மோதியிருக்க, இந்தியா 22, நியூஸிலாந்து 13 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. எஞ்சிய 27 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றிய நிலையில் இந்தியாவும், இலங்கையுடனான தொடரை 0-2 என முற்றிலுமாக இழந்த சூழலில் நியூஸிலாந்தும் இந்தத் தொடருக்கு வருகின்றன.
இந்திய அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அணியின் அடுத்த தலைமுறை டெஸ்ட் பேட்டர்களாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளனர். அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலியாவுக்க எதிரான தொடருக்கு முன், இந்தத் தொடர் அவர்களுக்கான முக்கிய பயிற்சிக் களமாக இருக்கும். அணியின் மூத்த பேட்டர்களான கேப்டன் ரோஹித், கோலி ஆகியோர் நிலையான ரன் சேகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொண்டு இந்தத் தொடருக்கு வருகின்றனர். பந்த், ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சர்க்கும் பொறுப்பில் உள்ளனர்.
பௌலிங் வரிசையில் பும்ரா, சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை சரிக்கும் முனைப்பில் இருக்க, சுழற்பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜாவுடன், குல்தீப் யாதவும் இணைகிறார். நியூஸிலாந்து அணி, பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே தடுமாற்றமான நிலையுடன் இந்தத் தொடருக்கு வருகிறது. கேப்டன் லாதம், கான்வே உள்ளிட்டோர் பேட்டிங்கில் பிரதானமாக இருக்க, இந்தியாவின் சுழற்பந்துவீச்சை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்ற கவலை அணிக்கு உள்ளது. காயம் காரணமாக வில்லியம்சன் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. ரச்சின் ரவீந்திரா தடுமாற்றமான ஃபாா்முடனேயே இருக்கிறார்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானம், தற்போது அங்கு நிலவும் வானிலை காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாறும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்படும் நிலையும் இருக்கிறது. ஏற்கெனவே மோசமான வானிலை காரணமாக இரு அணிகளின் பயிற்சியும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காலை 9.30 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.