“மக்களுக்கு ஏதும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தோல்வி” - கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!
“மத்திய பாஜக அரசு மக்களுக்கு ஏதும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு தோல்வி அடைந்துள்ளது” என கோவை தொகுதியில் 59ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டு 59ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“கோவை மக்களுக்கு நன்றி. கோவையின் தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டங்களை நம்பியே மக்கள் வாக்களித்துள்ளனர். மத்திய பாஜக அரசு மக்களுக்கு ஏதும் செய்யாதததால் தான் தமிழ்நாட்டில் இந்த தோல்வி. முதலமைச்சரின் திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். நான் மக்களோடு மக்களாக நின்ற ஒரு சாதராண தொண்டன். மக்களின் நம்பிக்கையில் வெற்றி பெற்றிருக்கிறேன். அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளபட்டதற்கு அவர்கள் சரியாக செயல்படாதது தான் காரணம். கோவைக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுவேன்” இவ்வாறு கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை எதிர்த்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.