உண்மையான இந்து யார்? ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி இடையே வார்த்தை போர்!
பாஜகவினர் உண்மையான இந்து அல்ல என்று எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதனால் மக்களவையில் ராகுல் காந்தி - பிரதமர் மோடி இடையே நேருக்கு நேர் விவாதம் ஏற்பட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 99 சீட்களில் வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் ராகுல் காந்தி பேசும் போது, பாஜக எம்பிக்கள் முழக்கமிட்டனர். அவர்கள் பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர். இதற்கு வாழ்க அரசியல் சாசனம் எனக் முழங்கி ராகுல் காந்தி உரையைத் தொடங்கினார். மேலும், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லோக்சபாவில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை. அகிம்சைக்கானது என்ற அவர், சிவன் படத்தைக் காங்கிரஸ் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம் என்றார். சிவனின் கை அம்சம்தான் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக உள்ளது.ஆனால் பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பில் இருந்த போதும் அவரை கடவுள் கைவிட்டு விட்டார் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர் தொடர் தாக்குதல்களில் இருந்து அரசியலமைப்பைப் பாதுகாத்துள்ளோம் என்று ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், பாஜக எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி அரசியலமைப்பு மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் சில தலைவர்கள் சிறையில் உள்ளனர். பிரதமரின் உத்தரவாலும், இந்திய அரசின் உத்தரவாலும் நான் தாக்கப்பட்டேன். அதில் மிகவும் மகிழ்ச்சியான பகுதி அமலாக்கத்துறையால் 55 மணிநேர விசாரணையாகும். மகாத்மா காந்தி குறித்து ஒரு படத்தின் மூலம் தான் அனைவருக்கு தெரியவந்ததாக பிரதமர் கூறுகிறார். அவரின் அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் கவனித்த மற்றொரு விஷயம், தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.
நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், ஹிந்துகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். நீங்கள் உண்மையான ஹிந்து அல்ல.” எனத் தெரிவித்தார். அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறிக்கிட்டு, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் தீவிரமான விஷயம் என்று கண்டனம் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயம் கிடையாது என்றார்.
இதனால் மக்களவையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் ஏற்பட்டது. இதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு இடை இடையே குறுக்கிட்டு பேசினார்.