"வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தேர்தல் ஆணையம் மிகப்பெரிய குற்றத்தை செய்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றத்தை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு குரல் கொடுத்தோம். ஆனால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை விவாதிக்க தயாராக இல்லை. இது மிகப்பெரிய ஊழல் என்று தெரிய வந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு இது போன்ற ஒரு தில்லு முல்லு நடவடிக்கைகள் ஒரு காரணம் என யூகிக்க முடிகிறது. பீகாரில் செய்வதைப்போல 2026 இல் தமிழ்நாட்டிலும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
தேர்தல் ஆணையம் இதற்கு துணைப்போவது என்பது தான் வேதனையிலும் வேதனை. இதனை எதிர்த்து அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் அகில இந்திய அளவில் ஒருங்கிணைய வேண்டும் எழுச்சி பெற வேண்டும். இந்த புரட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவிக்கின்றோம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செல்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணியை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் சேர்ந்து எவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்தார்களோ தோல்வியை சந்தித்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் அதிமுக பாஜகவோடு கைகோர்த்துள்ளது. தேர்தல் ஆதாயம் ஒன்றை மையமாக வைத்து இவர்கள் கூட்டணி அமைக்கிறார்கள். ஆனால் மக்கள் ஒருபோதும் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் யார் வேண்டுமானாலும் பேசலாம். கூட்டணி குறித்து பேசுகிறார்களோ என்ற கேள்விக்கு, அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு, பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம் என்று ஓபிஎஸ் கூறவே சந்தித்ததாக நான் கருதுகின்றேன். வரவேற்கின்றேன் அவருக்கு இப்போதுதான் நல்ல நேரம் பிறந்திருக்கின்றது என்று வாழ்த்துகின்றேன். அதிமுக கூட்டணியில் அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு யூகமான கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.