“சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!” - பிரதமர் மோடி
இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை கடுமையாக எதிர்த்த ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து 11,500க்கும் மேற்பட்ட செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் சின்னமான ‘தாமரை’தான் அக்கட்சியின் வேட்பாளர். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 370 முதல் 400 இடங்களை வெல்லும். பாஜக 370 இடங்களை கைப்பற்றுவதே இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை கடுமையாக எதிர்த்த ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி.
தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தேவையற்ற மற்றும் உணர்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்புவார்கள். ஆனால் பாஜகவினர் வளர்ச்சி, ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.