"பாஜக அதிக இடங்களைப் பெறும் ; மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் இடங்களை பெறுவோம்" - பிரதமர் மோடி கணிப்பு!
"பாஜக அதிக இடங்களைப் பெறும். அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் இடங்களை பெறுவோம்" என பிரதமர் மோடி கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் தனியார் நியூஸ் ஏஜென்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி தெரிவித்ததாவது..
“ பல தசாப்தங்களாக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சுற்றியே பாரம்பரியமாக அரசியல் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆழமாக வேறூன்றியுள்ளது. 2019 பொதுத் தேர்தல்கள் மற்றும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்பார்த்ததை விட சிறந்த வெற்றிகளை பெற்றதன் மூலம் பாஜக இடதுசாரிகளை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி என்கிற நிலையை அடைந்துள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் தங்களது இருப்பை நிலைநிறுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் 3 பேராக இருந்தோம், வங்காள மக்கள் எங்களை 80 இடங்களுக்கு அழைத்து வந்தனர். அதேபோல கடந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்றோம். இந்த முறை இந்தியாவிலேயே சிறந்த வெற்றியை மேற்கு வங்காளத்தில் பெறுவோம்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்புகள் சொல்கின்றன. இதேபோல மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது "அதிகபட்ச வெற்றியை" எட்டும் ” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.