“மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும்” - பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து அமெரிக்க நிபுணர் கருத்து!
பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பார் என அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இயான் பிரேமர் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. 6ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாளும், 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில அரசியல் விமர்சிகர்களும், பிரசாந்த் கிஷோர் போன்ற விமர்சகர்கள் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றும் கூறி வருகின்றனர்.
இதனிடையே, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அண்மையில் அளித்த பேட்டியில், “’2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துவார். பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 2019 வெற்றிக்கு அருகிலோ அல்லது அதைவிட சற்றே அதிகமாகவோ இருக்கும். மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்றே நினைக்கிறேன். அவர்கள் கடந்த தேர்தலில் வென்ற அதே எண்ணிக்கையைப் பெறலாம் அல்லது சற்று அதிகமான இடங்களை பெறலாம்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் கணிப்பு குறித்து கேட்டதற்கு, அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இயான் ப்ரெம்மர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பாஜக 295 முதல் 315 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. 2014-ல் பாஜக 282 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. NDA கூட்டணி மொத்தம் 336 இடங்களைக் கைப்பற்றியது. 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. NDA கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது.
ஒருபுறம், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, இந்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜகவின் ஆதரவை சிதைக்க முயற்சிக்கிறது. மறுபுறம், பாஜக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தனது இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் அதிக இடங்களை வெல்லவும் முயற்சி செய்கிறது.
பிரதமர் மோடி நிச்சயமாக மூன்றாவது முறையாக வெற்றி பெறப் போகிறார். இது மிகவும் உறுதிப்படுத்தும் செய்தி. அடுத்த ஆண்டு உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாகவும், 2028-ம் ஆண்டு 3வது பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறும்”என்று அவர் கூறினார்.