மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவு: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு பட்னாவிஸ் கோரிக்கை!
நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தன்னை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு கட்சியின் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் தனித்து கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை பாஜகவுக்கு உள்ளது.
மக்களவை தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும், சரத் பவாரின் NCP 8 தொகுதிகளையும் கைப்பற்றின. .
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பமாக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேவேந்திர பட்னாவிஸ் பாஜக தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் பட்னாவிஸ் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா இரண்டாக உடைந்த போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவர் தேவேந்திர ஃபட்னாவிஸ். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவின் தலைவர் ஒருவர் பொது வெளியில் தோல்வி குறித்து பேசுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.