நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. காயம்... #RahulGandhi மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜக எம்.பி. காயமடைந்தார். இதுகுறித்து ராகுல்காந்தி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் (டிச.17) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று (டிச.18) நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.