புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு - முடிவுக்கு வருகிறதா என்.ஆர்.காங்.- பாஜக கூட்டணி?
புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி தொடருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி செயல்படுகிறார். முதலமைச்சர் ரெங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வாரியத் தலைவர்களாக பதவி கோரினர். மேலும் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். ஆனால் முதலமைச்சர் ரெங்கசாமி இக்கோரிக்கை பற்றி எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் பாஜக எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட், வெங்கடேசன், ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் நேற்று டெல்லிக்கு சென்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவரருமான ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர்.