பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம் - பிரதமர் மோடியை விமர்சித்ததால் நடவடிக்கை!
பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த, ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் உஸ்மான் கனியை பதவியிலிருந்து பாஜக நீக்கியுள்ளது.
கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை பறித்து அவற்றை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கும் பகிர்ந்து அளித்து விடும். பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கிட்டு காங்கிரஸ் பிரித்து கொடுத்து விடும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் உஸ்மான் கனி, பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உஸ்மான் கனி பேசியதாக கூறி, கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது.