ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து: மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,
“மிக மோசமாக பேசிவிட்டு தற்போது மன்னிப்பு கோருவதாக கூறுவதை ஏற்க முடியாது. மன்னிப்பு கோர அருகதை இல்லாத பேச்சை பேசி உள்ளீர்கள். ராணுவ அதிகாரி குறித்து மிக மோசமாக பேசி உள்ளீர்கள். தற்போது வழக்கில் இருந்து விடுபடவே மன்னிப்பு கேட்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மன்னிப்பை முழுமையாக நிராகரிக்கிறோம்.
பொது வாழ்க்கையில் உள்ள ஒரு அமைச்சர் இப்படி பேசக்கூடாது. அமைச்சரின் தரம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் நான் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என்று கூறுவது மிக மோசமானது” என தெரிவித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் வழக்கை சந்தித்தே ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அமைச்சர் பேச்சு குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐஜி, ஏடிஜிபி மட்டத்திலான மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மத்தியப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்குள் இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கையை மே 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர். எஃப்.ஐ.ஆர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற வேண்டும். விசாரணைக்கு அமைச்சர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.