பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு - மணிப்பூர் பகுதியில் ஊரடங்கு அமல்!
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் வக்ஃபு திருத்த சட்டத்தை ஆதரித்து, சமூக ஊடகப் பதிவு மூலம் பாஜக அரசை பாராட்டிய மணிப்பூர் மாநில பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் அஸ்கர் அலி வீட்டிற்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
தௌபல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் லிலாங் தொகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரச்னை ஏற்படும் என்று அஞ்சி, அவர் தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்டார். ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை முற்றுகையிட்டதால் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து லிலாங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் BNSSஇன் பிரிவு 163 இன் கீழ் காலவரையறையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக "நாங்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஒரு கும்பல் எங்கள் வீட்டின் மீது கற்களை வீசத் தொடங்கியது. நாங்கள் மன்னிப்பு கேட்டோம், ஆனால் அவர்கள் வீட்டைத் தாக்கினர். குர்ஆன் கூட எரிக்கப்பட்டது. பணம், தங்க நகைகள் போன்றவை திருடப்பட்டன. அவர்களின் நோக்கம் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சூறையாடுவதே” என பாஜக தலைவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.