“பாஜகவுக்கு இனி எப்போதும் ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக பிஜேடி செயல்படும்!” - நவீன் பட்நாயக் அதிரடி!
“பாஜகவுக்கு இனி எப்போதும் ஆதரவு இல்லை எனவும், வலிமையான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இயங்குவோம்” எனவும் பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் தனது கட்சியின் ஒன்பது மாநிலங்களவை எம்பிக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் துடிப்பான மற்றும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுமாறும், மாநிலத்தின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளை அழுத்தமான முறையில் எழுப்புமாறும் எம்பிக்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஜேடியின் ராஜ்யசபா தலைவர் சஸ்மித் பத்ரா,
“இந்த முறை பிஜேடி எம்பிக்கள் ராஜ்யசபாவில் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்துவது உறுதி. ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை எழுப்புவதோடு, மாநிலத்தின் மோசமான மொபைல் நெட்வொர்க் மற்றும் மாநிலத்தில் உள்ள குறைவான வங்கிக் கிளைகள் ஆகிய பிரச்சினைகளையும் எழுப்புவார்கள்.
நிலக்கரி ராயல்டியை திருத்த வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தங்களின் உரிமையான பங்கை இழந்த மாநில மக்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்தில் பல பிரச்னைகளில் பாஜகவை ஆதரித்து வந்தது பிஜேடி. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கவும் உதவியது.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் 147 தொகுதிகளுக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜேடி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜேடி ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.