இமாச்சலில் கங்கனா ரனாவத்தை களமிறக்கியது பாஜக - 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி வேட்பாளராக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
பாஜக முன்னதாக 4 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. 3வது மற்றும் 4-ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 111 பேர் கொண்ட இந்த வேட்பாளர்கள் பட்டியலில், ஆந்திரா, பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஜெயம் ரவியின் ‘ஜீனி’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, அம்மாநிலத்தின் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார். பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சரும், கடந்த ஆண்டு காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருமான கிரண்குமார் ரெட்டி ராஜம்பேட் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய் ஆகியோர் பீகார் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சீதா சோரன் டும்கா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் அண்ணி ஆவார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சென்று, மீண்டும் பாஜகவுக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகாவின் பெல்காம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.