"மத்திய அமைச்சரவையில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை!" - கர்நாடக பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி குற்றச்சாட்டு!
உயர்சாதியினருக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவதாகவும், தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும் விஜயபுரா தொகுதி பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரம் மேற்கொண்டது. ஆனால் பாஜக 240 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் 53 இடங்கள் என மொத்தம் 293 இடங்கள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு கிடைத்தது. இதையடுத்து மத்தியில் பாஜக தனது கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அதன்பிறகு மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை சேர்த்து பாஜக எம்பிக்களும் மத்திய அமைச்சர்களாக உள்ளன. மொத்தம் 81 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற நிலையில் தற்போது பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், உயர்சாதியினருக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவதாகவும், தலித்துகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், விஜயபுரா தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ரமேஷ் ஜிகஜினகி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “இது நியாயமா, அநியாயமா என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் ஒரு தலித்தாக நான் மட்டுமே தொடர்ந்து 7 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், அனைத்து உயர்சாதியைச் சேர்ந்தத் தலைவர்களும் மத்தியமைச்சர் ஆகிவிட்டனர். தலித்துகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லையா? இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது.
நான் அமைச்சர் பதவியை எனக்காகக் கேட்கவில்லை. நான் ஒவ்வொரு முறை வெற்றிபெற்ற பிறகும், என் தொகுதிக்கு திரும்புகையில் அனைவராலும் விமர்சிக்கப்படுகிறேன். பாஜக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று என்னைப் பலரும் எச்சரித்துள்ளனர். நான் மத்திய அமைச்சராக வேண்டும் என்று மக்கள் அழுத்தம் தருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.