பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி - தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி , ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு....? கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன சொல்கின்றன...? கள நிலவரம் என்ன... விரிவாக பார்க்கலாம்...
வடகிழக்கு மாநிலமான மிசோரம்மில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதால், 70 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவாகியுள்ளது. தொடர்ந்து, சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ம் தேதியும், மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதியும், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது.
சத்தீஸ்கரில் ஓங்கியுள்ள கை
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறைபோல் இல்லாமல், பெரும்பான்மைக்கான நெருக்கத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு வலுவான எதிர்க்கட்சியாக பாஜக வரும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகளில் சொல்லப்படுகின்றன. மத்திய பிரதேசத்தில் இருந்து 2000ம் ஆண்டு உருவான சத்தீஸ்கர் மாநிலத்தில், 2003 முதல் 2018 வரை பாஜக ஆட்சியில் இருந்தது. பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் தட்டிப் பறித்தது. மீண்டும் தக்க வைக்கும் என்று கணிப்புகள் சொல்கின்றன.
மிசோராம் யாருக்கு...?
முழு வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ள மிசோரம்மில் ஆளும் மிசோ தேசிய முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்கிறார்கள். பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் மிசோ தேசிய முன்னணிக்கு கிடைப்பதில் இழுபறி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நீண்ட காலம் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ஸோரம் மக்கள் இயக்கம் ஆகியவை இரண்டாம் இடத்துக்கான போட்டியில் உள்ளன என்கிறார்கள். இரண்டு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் வெல்வார்கள். இதனால், அங்கு, தொங்கு சட்டசபை அமையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தற்போதைய முதலமைச்சர் ஸோரம் தங்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியா?
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக-வும் ராஜஸ்தானில் காங்கிரஸும் ஆட்சியில் உள்ளன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக - காங்கிரஸ் இடையில் கடும் போட்டியானது நிலவுகிறது. இதனால், வேட்பாளர் தேர்வு முதல் தேர்தல் வாக்குறுதிகள் வரை இரண்டு கட்சிகளுமே அதிக கவனம் செலுத்தியுள்ளன.
மத்திய அமைச்சர் உள்ளிட்ட தற்போது மக்களவை உறுப்பினர்களாக உள்ளவர்கள் சட்டப்பேரவைக்கு களமிறக்கியுள்ளது பாஜக. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவிற்கு இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக ஆளுங்கட்சி எதிரான அதிருப்தி அலை, பாஜகவிற்கு சாதகமாக இருக்கிறது என்கிறார்கள். பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
ஆட்சி மாற்றமா...?
மத்திய பிரதேசம் போல், ராஜஸ்தானிலலும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அதிருப்தி, உட்கட்சி விவகாரம் உள்லிட்டவை பாஜக-விற்கு சாதகமாக உள்ளன. ஆகையால், இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராஜஸ்தானில் பாஜக, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் சொல்கின்றன.
கடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று, முதலில் ஆட்சியமைத்த கமல்நாத் காங்கிர்ஸின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கட்சித் தாவி, ஆட்சி கவிழ காரணமானவர்களில் சிலர் மீண்டும் காங்கிரஸ் திரும்பியுள்ளனர். கமல்நாத் மீதான கரிசனம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், பாஜக-வில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்காமல் தேர்தல் களத்தை சந்திக்கிறது. இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தெலங்கானா யாருக்கு...?
தென்னிந்திய மாநிலமான தெலங்கானா கடந்த 2014-ம் ஆண்டு உருவானது. தனி மாநிலத்திற்காக பெரும் போராட்டங்களை முன்னெடுத்த, சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. தற்போது, பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று களத்தில் நிற்கிறது. இங்கு பி.ஆர்.எஸ் - காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறையை விட குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் வென்றாலும், சந்திரசேகர்ராவ் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். கடும் போட்டிக்கு பிறகு, யார் ஆட்சியமைத்தாலும் வலுவான எதிர்க்கட்சி அமைவது உறுதி என்கிறார்கள். குறிப்பா, மத்தியில் ஆளும் பாஜக சுமார் 10 இடங்களில் வென்று 3வது இடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள்.
தனித்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலஙளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக – காங்கிரஸ் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது. இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் வெற்றி தோல்வி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள். இதனால், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கூடுதல் முக்கியத்துவம் அளித்து தலைவர்களை களமிறக்கியுள்ளன. கே.ஜி முதல் இலவசக் கல்வி, 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ். முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிக்காமல், பிரதமர் மோடி, மத்திய அரசின் சாதனைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்கிறது பாஜக.பாஜக - காங்கிரஸ் கூட்டா....?
பாஜக - காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் கடுமையாக மோதிக்கொண்டாலும், 2 கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒன்று சேர்ந்துள்ளன என்கிற குரல் தெலங்கானாவில் கேட்கிறது. அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலங்கானாவில் பாஜக போட்டியிலேயே இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பில்லை. எனவே தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைப்போம். இதன் மூலம் தேசிய அளவில் நாங்க வளர்ச்சி பெறுவோம். ஆனால், இதைத் தடுக்க காங்கிரஸ் - பாஜக இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டு சதி செய்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்து கணிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும்....?
இமாச்சல் பிரதேசம், கர்நாடகத்தைத் தொடர்ந்து 5 மாநிலத் தேர்தலிலும் வெல்லுமா காங்கிரஸ்?
அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதி போட்டியில் சாதிக்குமா, மத்தியில் ஆளும் பாஜக...?
மணிப்பூர் வன்முறைகளின் பாதிப்பு மிசோரம் தேர்தலில் எதிரொலிக்குமா..? பொருத்திருந்து பார்க்கலாம்....
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண....