பிறந்தநாள் மிட்டாயால் நேர்ந்த விபரீதம் - 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்றில், மிட்டாய் சாப்பிட்ட ஏழு மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவி தனது சக மாணவர்களுக்கு மிட்டாய் வழங்கியுள்ளார். இந்த மிட்டாய்களைச் சாப்பிட்ட ஏழு மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார், பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிட்டாயில் ஏதேனும் ரசாயனக் கலப்படம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிட்டாய்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.