யூடர்ன் அடித்த பிலாவல் பூட்டா - பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி!
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டா தனது முடிவை மாற்றியிருப்பதால் பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் முத்தஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களையும் கைப்பற்றின. மேலும் 17 தொகுதிகளில் மற்ற சிறிய கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனைத் தொடர்ந்து நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி , பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
பாகிஸ்தானில் நவாஸின் முஸ்லிம் லீக் கட்சி உடனான, அதிகாரப்பகிர்வு திட்டத்தை நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க பல்வேறு கட்சிகளும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று சிந்து மாகாணம் தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது:
” முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை. எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை. நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இந்த நிலையில் நவாஸ் சரீஃப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியிடையே சுமூகமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.