லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்...
இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் பட்டாசு வெடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதுபோன்ற பதிவுகள் வைரலாகும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் இரவு நேரங்களில் இது போன்ற பைக் ரேஸ்கள் மற்றும் சாகச பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர்.
சமீப காலமாக காவல்துறை நடவடிக்கையால் இரவு நேரங்களிலும் சாகச பயணங்கள் செய்வது குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தீபாவளியையொட்டி, இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் ராக்கெட் போன்ற வெடிகளை ஆபத்தான முறையில் சாகசம் செய்தபடி வெடிக்கும் வீடியோக்களை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற ஆபத்தான முறையில் சாகச வீடியோக்கள் எடுக்கும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையினரிடம் பொதுமக்கள் இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளனர். சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டும், ஹெல்மெட் மாட்டிக் கொண்டும் வீடியோ எடுக்கின்றனர். இருப்பினும், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட டிடிஎப் வாசனை போலீசார் கைது
செய்து சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி அவரது லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து
செய்தது குறிப்பிடத்தக்கது.