”பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு” - விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பு, இந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை ஒரு ஆண்டோ அல்லது அவர்களுக்கு தகுந்த நேரத்தை எடுத்துக்கொண்டு மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் அவசரக் கதியில் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது சந்தேகத்தை கிளப்புகிறது.
மேலும், தேர்தல் ஆணையமானது நீருக்கான கட்டண ரசீது, மின்சார கட்டண ரசீது, எரிவாயு ரசிது ஆகியவற்றை ஆவணமாக ஏற்க மறுக்கிறார்கள். பீகாரில் உறைவிட சான்றிதழ் நடைமுறையில்லை. பிறப்பு சான்றிதழ் என்பது கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 கோடி அளவிற்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் எத்தனை பேர் தகுதியான வாக்காளர்கள் என்று அடையாளம் காணப்படுவார்கள் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
மேலும் பெண்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பதும் குறைவாகவே உள்ளது. இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்பது பெண் வாக்காளர்களை குறி வைத்து நடக்கிறது நீக்கப்பட்டுள்ள பலர் இதில் பெண்கள் ஏனெனில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதே குற்றச்சாட்டாக இருக்கிறது.இங்கு இறந்ததாக கூறப்பட்டு நீக்கப்பட்ட வாக்காளர்கள் தற்போது நாங்கள் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறோம் என்று கூட வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். எனவே எந்த விதி முறையையும் கடைப்பிடிக்காமல் தேர்தல் ஆணையம் எடுத்த வாக்காளர் நீக்கும் நடவடிக்கை என்பது இயற்கை நீதிக்கு மாறானது, எனவே பீகார் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு தடைவிதிக்க வேண்டும்.இதே மாதிரி வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தால் நாடு முழுதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களில் ஒன்று கூட பலரால் தாக்கல் செய்ய முடியவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அதேபோன்று 7.24 கோடி வாக்காளர்களின் அந்த பட்டியலை எளிதாக தெரிந்து கொள்ளும்படி டிஜிட்டல் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் அவர்களின் வாக்குரிமை கிடைக்கப் பெற வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதன்பின் நீதிபதி வழக்கு விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.