#Bihar | கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலம், கதிஹர் மாவட்டத்தில் கங்கையில் இன்று காலை படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, படகு அம்தாபாத் பகுதியில் உள்ள கோலாகாட் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்தவர்களில் பலர் நீரில் மூழ்கி மாயமாகினர்.
இதையும் படியுங்கள் : பரந்தூர் மக்களுடன் #Vijay சந்திப்பு எங்கே?
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கரைக்கு நீந்திச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாயமான 4 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் பவன் குமார் (60) மற்றும் சுதிர் மண்டல் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.