ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..
ஊழல் விவரங்களை வெளியிட வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, மற்றும் 2 வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள இந்தய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு இன்று(டிச.26) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி, மற்றும் 2 பிற வங்கிகள் உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலை இந்திய ரிசர்வ் வங்கி, தனியார் துறை வங்கிகளுடன் இணைந்து செய்துள்ளதாகவும், இந்த மோசடியில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சில உயர் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டது.
இதனையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த ஊழல் குறித்த முழு விவரங்களையும் செய்தி அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மும்பையின் 11 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் ஒவ்வொன்றாக வெடிக்கப்படும் எனவும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்பை காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 11 இடங்களிலும் உடனடியாக சென்று சோதனையிட்டனர். ஆனால் அந்த சோதனைகளில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் மின்னஞ்சல் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.