#BiggBoss8 : மனசாட்சி என்றால் என்ன? இணையத்தில் பேசுபொருளான முத்துக்குமரனின் கேள்வி!
2-வது வாரமான நேற்று, பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரன் எழுப்பிய கேள்வி இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை, விஜய் சேதுபதி எவ்வாறு தொகுத்து வழங்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ என்பதற்கேற்ப இந்த முறை வித்தியாசமான முறையில் போட்டி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. போட்டியின் முதல் வார இறுதியில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து போட்டியின் இரண்டாவது வாரமான நேற்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பேசினார். இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள கேள்விகளை எழுப்பலாம் என தொகுப்பாளர் விஜய் சேதுபதி கூறினார்.
அப்போது முத்துக்குமரன் எழுந்து நின்று, மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன் எனக் கூறினார். அதுமட்டுமின்றி, பெண்கள் அணியில் உள்ள எல்லா போட்டியாளர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் மனசாட்சியுடன் விளையாட மாட்டீங்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதனால், மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்பதை பெண்கள் அணியினர் விளக்க வேண்டும் என முத்துக்குமரன் கேட்டுக் கொண்டார். இதற்கு ரசிகர்கள் பலர் சிரித்தனர். ஏனெனில், இதற்கு முந்தைய நாள்களில் விதிகளை மீறிய ஜாக்குலினுக்கு ஆண்கள் அணியினர் தண்டனை வழங்கினர். ஒரு சுவரைப் பார்த்து அமர்ந்திருக்க வேண்டும் என்பது தான் அந்த தண்டனை. அந்த தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது ஜாக்குலின் அழுதார்.
ஆண்கள் அணியில் உள்ள அனைவரும் தன்னை குறி வைத்து பழிவாங்குவதாகவும், தனக்கு மனரீதியாக இது மிகப்பெரிய சோர்வை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு ஜாக்குலின் அழுதார். ஜாக்குலினுக்கு ஆதரவாக தர்ஷிகா, சாச்சனா, பவித்ரா உள்ளிட்டோர் ஆண்கள் அணியிடம் முறையிட்டனர். மனசாட்சியுடன் விளையாடுங்கள் என்று முத்துக்குமார் உள்பட ஆண்கள் அணியினரிடம் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியை தான் முத்துக்குமரன் விஜய்சேதுபதி முன்பு எழுப்பினார். முத்துக்குமரனின் இக் கேள்விக்கு ஜாக்குலினும், தர்ஷிகாவும் பதில் அளித்தனர். விளையாட்டில் ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு அதன்படி விளையாடுவதுதான் மனசாட்சியுடன் விளையாடுவது என பதில் அளித்தனர்.
மறுமுனையில், இந்த பதில் எனக்கு புரியவில்லை என முத்துக்குமரன் கூறியதால் மக்கள் மத்தியில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. இப்போது மட்டுமல்ல, எத்தனை முறை கேட்டாலும் பெண்கள் அணியிடம் இதற்கு பதில் கிடைக்காது என்றும் கிடைத்தால் அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன் எனவும் முத்துக்குமரன் பகடியுடன் குறிப்பிட்டார். சமூகவலைதளங்களில் முத்துக்குமரனின் இந்த கேள்வி பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.