விரைவில் தொடங்கும் #BiggBoss சீசன் 8... மாற்றப்படுகிறதா பிரபலத் தொடர்களின் ஒளிபரப்பு நேரம்?
பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், பிரபலத் தொடர்களின் ஒளிபரப்பும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 60 கேமராக்கள் முன்னால் பிரபலங்கள் வாழும் 100 நாட்களை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தது BiggBoss நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை பல்வேறு வகையில் வித்தியாசம் காட்டி வந்தது. இருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது கமல்ஹாசன் தான்.
ஆனால் தற்போது எட்டாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் பிக் பாஸிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு யார் வருவார் என ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வி எழுந்தது. பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு விஜய் சேதுபதி தமிழ் பிக் பாஸ் சீசன் 8-ன் அடுத்த தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான புரோமோக்களும் வெளியிடப்பட்டு விட்டது.
கடந்த சீசனில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால் தான் கமல்ஹாசனும் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய மாற்றங்களால் மேலும் பல புதிய முயற்சிகள் நிகழ்ச்சிக்குள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் முதல் எபிசோடான அறிமுக விழா அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 7 முதல் வார நாள்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால், அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி, பனி விழும் மலர் வனம் தொடர் பிற்பகல் 1 மணிக்கும், வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் பிற்பகல் 3.30 மணிக்கும், நீ நான் காதல் தொடர் மாலை 6 மணிக்கும், மகா நதி தொடர் மாலை 6.30 மணிக்கும், ஆஹா கல்யாணம் தொடர் இரவு 7 மணிக்கும், சின்ன மருமகள் தொடர் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.