Bigg Boss 8 | பணப்பெட்டியை எடுக்க முயன்று வெளியேறிய போட்டியாளர்... யார் தெரியுமா?
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் இருந்தனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் விளையாட்டு சென்று கொண்டிருக்கின்றது. இந்த சூழலில், பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கமாக பணப்பெட்டியை எடுப்பவர்கள் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறுவர்.ஆனால் இந்த சீசனில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் எடுத்து வருபவர்கள் விளையாட்டை தொடரலாம் என்று புதிய அறிவிப்பை பிக் பாஸ் கொடுத்தது.
இந்த சூழலில், முதல் நாள் நடைபெற்ற பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டு இருந்ததை 15 விநாடிகளில் முத்துக்குமரன் எடுத்தார். தொடர்ந்து ரூ. 2 லட்சத்துக்கான பணப்பெட்டியை ரயான், பவித்ரா ஆகியோர் எடுத்தனர். ரூ. 5 லட்சத்துக்கான பணப்பெட்டியை விஜே விஷால் எடுத்தார். செளந்தர்யா பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, எடுக்க முடியாத்தால் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டார்.
இன்று ரூ. 8 லட்சம் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், அதை எடுக்க 35 விநாடிகள் என நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜாக்லின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் பாஸ் வீட்டின் கதவுகள் மூடப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்லின் வெற்றிப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ஜாக்லின் வெளியேறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.