“சாத்தியமற்றது” - 90 மணிநேர வேலை குறித்து BharatPe CEO நளின் நேகி கருத்து!
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், அண்மையில் ஊழியர் ஒருவருடனான உரையாடலின் போது, “ஒருவர் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள், அவர் எவ்வளவு நேரம் உங்கள் முகத்தை பார்ப்பார்?. சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமை உங்களால் வேலை செய்ய முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறேன். நான் ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்கிறேன் ” என பேசியிருந்தார்.
அவரின் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு பலரும் அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, “உயர்பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியிருந்தார். தொடர்ந்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவும், வேலைக்காக ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்தை தியாகம் செய்ய அழுத்தம் கொடுப்பது வருத்தம் தருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து தொழிலதிபர் அதானி, வாரத்திற்கு 70 மணி நேர வேலைக்கு எதிராக பேசியிருந்தார். அதானி கூறுகையில், “வேலை – வாழ்க்கை சமநிலை என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருக்கும் வேறுபடும். சிலருக்கு வீட்டில் 4 மணி நேரம் செலவிட்டால் போதும். சிலருக்கு 8 மணி நேரம் செலவிட வேண்டும் என நினைப்பார்கள். எனவே, உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நீங்கள் செய்யும்போது உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “எங்களுடைய நிறுவனம் தொழிலாளர்களுடன் நட்புடன் இருக்கும் நிறுவனமான அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதில்தான் நிறுவனத்தின் கவனமும் உள்ளது. வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வதில் நம்பிக்கை இல்லை, அது சாத்தியமற்றது. பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் சரிவர வேலை செய்வார். தன் வேலையை ரசிக்கும் பணியாளர், தேவைப்படும் நேரத்தில் மட்டும் விரைவாக வேலை செய்து கொடுப்பார். அதன் பின்பு அவர் அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.