ரத்தன் டாடாவுக்கு #BharatRatna விருது... மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!
ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், நேற்றிரவு (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.