பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆர்டி விளக்கம்!
மத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் 'இந்தியா', ’பாரத்’ ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்துவதில் தவறில்லை என என்சிஇஆர் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக ’பாரத்’ என்ற பெயரையே பயன்படுத்த வேண்டுமென கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தது.
இதுகுறித்து என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி இன்று (ஜூன் 17) பேசியதாவது, “இந்தியா - பாரத் இரு பெயர்களும் பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும். இந்திய அரசமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடியே எங்களது நிலைப்பாடும் உள்ளது. அதையே நாங்கள் பின்பற்றுவோம். ’பாரத்’ என்றும், ’இந்தியா’ என்றும் அழைப்பதில் என்ன பிரச்னை உள்ளது?
இது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை. இந்தியா என்பது எங்கு பொருத்தமாக அமையுமோ அங்கெல்லாம் ’இந்தியா’ என்றும், பாரத் என்பது எங்கு பொருத்தமாக அமையுமோ அங்கெல்லாம் ‘பாரத்’ என்றும் பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே இவ்விரண்டு பெயர்களும் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இதே நடைமுறை, புதுப் பாடப்புத்தகங்களிலும் தொடரும். ஆகவே இது தேவையற்ற விவாதம்” என்றார்.
7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணத்தின்படி, ’பாரத்’ என்ற பெயரால் அழைப்பதே பொருத்தமென அக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இக்குழுவின் பரிந்துரையின்படி எந்த நடவடிக்கையையும் மாற்றங்களையும் என்சிஇஆர்டி செயல்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.