ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது இழுபறி - முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த நிலையில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக 115 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் தாண்டிய நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மகந்த பாலக்நாத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
2 துணை முதலமைச்சர்கள் தேர்வு
மேலும், முதலமைச்சர் போட்டியில் முன்னிலையில் இருந்த தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.