For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைப் பெற பகவத் கீதையே உதவியது -மனு பாக்கர் பேட்டி!

07:41 PM Jul 28, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைப் பெற பகவத் கீதையே உதவியது   மனு பாக்கர் பேட்டி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தைப் பெற பகவத் கீதையே உதவியது என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில், முதல் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்த 2024 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பதக்கத்தை பதிவு செய்ததுடன், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி காட்டி இருக்கிறார் மனு பாக்கர். மேலும், 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த ஓ ஜின் தங்க பதக்கமும், அதே கொரியா நாட்டை சேர்ந்த கிம் யேஜி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

தற்போது, இந்தியாவுக்காக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக வீராங்கனை மனு பாக்கருக்கு இந்திய மக்கள் இணையத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்தியாவின் முதல் பதக்கம் வெல்ல பகவத் கீதை தனக்கு உதவிகரமாக இருந்ததாக மனு பாக்கர் தெரிவித்துள்ளார். பதக்கம் வென்ற பிறகு அவர் பேசியதாவது, ''இது இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம். அதைப் பெற்றுத்தருவதற்காக மட்டுமே உழைத்தேன். அதிக பதக்கங்கள் பெறுவதற்கான தகுதி உடையது இந்தியா. இம்முறை அதிக பதக்கங்களை வெல்வோம் என எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் இதனைக் கனவு போன்று உணர்கிறேன். கடின முயற்சிகளை மேற்கொண்டேன். கடைசி ஆட்டம் வரையும் கூட என்னிடமிருந்த எல்லா ஆற்றலையும் வெளிப்படுத்தினேன். அது வெண்கலமாக மாறியுள்ளது. அடுத்தமுறை என் உழைப்பை மேலும் மதிப்புடையதாக்குவேன்'' எனக் குறிப்பிட்டார்.

கடைசி நிமிடங்களில் இருந்த மனநிலை குறித்து மனு பாக்கரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''உண்மையில், கீதை படிப்பதை என் வழக்கமாகக் கொண்டவள் நான். என்ன செய்ய வேண்டுமோ அதை செய். முடிவைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். விதியைக் கட்டுப்படுத்த முடியாது. கர்ம வினைகளில் கவனம் செலுத்து. அதன் பலனைப் பற்றி கவலைகொள்ளாதே என்று கீதையில் அர்ஜூனனிடம் கிருஷ்ணர் கூறுவார். இதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது'' எனக் கூறினார். மேலும், ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அந்த வருத்தத்திலிருந்து விடுபட நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டது. கடந்த காலம் கடந்து சென்றதாகவே இருக்கட்டும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். பதக்கம் எப்போதுமே குழுவின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்தான். அதனை பெற்றுக்கொண்டவளாக நான் இருந்ததில் பெருமை அடைகிறேன்'' என மனு பாக்கர் பேசினார்.

Tags :
Advertisement