"ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகள்" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.