"டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை" - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை இட போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.
இதையும் படியுங்கள் : மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு..!
அவர் அளித்த பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, தற்போது பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆமாத்மி எம்பி சுவாதி மாலிவால் விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை ஆம் ஆத்மி முற்றுகை இட போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது :
"பிரதமர் மோடிக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாளை (மே - 19) மதியம் 12 மணியளவில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம். ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பிரதமர், முடிந்தால் எங்களது கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துக் கொள்ளட்டும். ஏற்கெனவே எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த அனைவரையும் சிறையில் அடைக்க முயல்கிறார்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.