கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது. முன்னதாக நடைபெற்ற படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : நாளை மறுநாள் வெளியாகிறது ‘கில்லர்’ படத்தின் அப்டேட்!
கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து ‘தக் லைப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, கமல்ஹாசன் மீது பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிவில் நீதிமன்றம், கன்னட மொழி, கலசாரம், நிலம், இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.