நீங்க நம்பாவிட்டாலும் அதான் நெசம்... #Sahara-வில் வெள்ளம்!
உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பாலைவனம் என்றால் வறண்ட நிலமும், தண்ணீரற்ற பகுதியும்தான். கண்ணிற்கு எட்டும் தூரமெல்லாம் கானல் நீர்தான். மேலும் பாலைவனம் என்றாலே நமது நினைவுக்கு வருவது சஹாரா பாலைவனம் தான். ஏனெனில் அந்த பாலைவனத்தின் பெயரைத்தான் நிறைய பாடல்களில் கேள்விப்பட்டிருப்போம். மேலும் உலகின் மிகப்பெரிய பாலைவனம் என்றால் அது சஹாரா பாலைவனம் தான்.
அப்படிப்பட்ட சஹாராவில் திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது சஹாரா. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் அங்குள்ள இரிக்கி என்ற ஏரி நிரம்பி காணப்படுகிறது. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாசாவால் எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.