“மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன், தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்” - பாமக மாநில பொருளாளர் திலகபாமா!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
பாமகவும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய சமூக, சமுதாய நல்லிணக்க மாநாட்டில் சமுதாயத் தலைவர்கள் பங்கெடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு மிரண்டு போய் உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பை திசை திருப்ப நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் அன்புமணி ராமதாஸை விமர்சித்து வருகிறார்கள். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பேசுவதற்கு முன்பு, தமிழை ஒவ்வொரு தமிழனும் கட்டாய பாடமாக்க வேண்டும் என கேட்க வேண்டும். ஆனால் இது குறித்து திராவிட கட்சிகள் பேசாது.
கூடுதல் மொழி கற்றுக்கொள்வது அவர்களது விருப்பமாக இருக்க வேண்டும். ஹிந்தி கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் கிடையாது. இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு நிதி வழங்க முடியாது எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம். மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் அது செயல்படுத்த வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. இதனால் நிதி தர மாட்டோம் எனக் கூறுவது தமிழக அரசை தண்டிக்கவில்லை. தமிழக மக்களை தண்டிக்கிறீர்கள்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டும், புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம். பாடத்திட்டத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் என குறிப்பிடப்படுகிறது. ஆனால் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். காமராஜர இல்லை என்றால் குலக்கல்வி கொள்கையில் சிக்கி இருப்பீர்கள்” எனப் பேசினார்.