மூச்சுப்பட்டா நோகுமுன்னு, மூச்சடக்கி முத்தமிட்டேன்..! - பயணத்தில் மகள் நிம்மதியாக தூங்க தனிவிமானம் மூலம் அழைத்துச் செல்லும் தந்தை!
சீனாவில் வாங் என்பவர் ஒவ்வோரு விடுமுறையின் போதும் பயண சிரமத்தை குறைக்க தனது மகளை தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் டிராகன் ஆண்டாக அமைந்துள்ளது. சீனாவில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். சீன கலாச்சாரத்தில் இது ‘வசந்த விழா’ என அழைக்கப்படுகிறது.
சீனக் கலாச்சாரத்தில் இது முக்கியமான விடுமுறை தினங்களுள் ஒன்றாகும். இந்த புத்தாண்டின் போது சொந்த ஊர்களுக்கு செல்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சென்னையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும்போது ஏற்படும் நெரிசலைப் போன்றது.
இந்நிலையில், இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாங் என்பவர் தன் ஏழு வயது மகளை இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். வருடா வருடம் முக்கிய திருவிழாக்களின் போது தனது மகளை தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த வாங் விமானிகளின் பயிற்சியாளர் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், சாலை வழியாக தனது ஊருக்கு செல்ல மூன்றுமணி நேரம் ஆகும் என்றும், விமானம் மூலம் 50 நிமிடங்களில் சென்றுவிடுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்மூலம் எந்தவித எரிச்சலும் இல்லாமல் தனது மகள் அமைதியான தூக்கத்தை பெறுவாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தனது சொந்த ஊரின் அருகில் பறக்கும் முகாமில் தனது விமானத்தை நிறுத்துவதற்கான அனுமதியை பெறுவதாக கூறுகிறார். வாங்கின் சிறிய விமானத்தின் விலை இந்திய மதிப்பில் 1 கோடியே 28,000 எனவும், ஒரு முறை முழுவதுமாக பெட்ரோல் நிரப்பினால், கிட்டதட்ட 1200 கி.மீ வரை பயணிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.