தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி - பொதுமக்கள் அச்சம்!
களக்காடு அருகே தேவநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம்
அமைந்துள்ளது. இதில் யானை, கரடி, புலி, கடமான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார
பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், களக்காடு அருகே
உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் காணப்படுவதாக
அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பட்டப்பகலில் கரடி ஊருக்குள் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அக்கிராம மக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊர் பகுதியில் சுற்றி வருகிறது. இங்குள்ள புதர்களில் பதுங்கும் கரடி உணவுக்காக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது என்றனர். கரடி நடமாட்டத்தால் கிராம
மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.