#RainUpdates | கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில் கரையைக் கடந்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரமடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் -தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது.
இதையும் படியுங்கள் : T20W | முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா -தென் ஆப்ரிக்கா இன்று மோதல்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்தது. கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.