“பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” - அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!
எழுத்தாளரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரையை சந்தித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் (அக். 6) இரவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாதிரி பள்ளி மாணவர் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களிடம் பள்ளி மற்றும் விடுதியில் தேவையான வசதிகள் இருக்கிறதா என கேட்டறிந்தார். மேலும், விடுதியை பராமரிக்கும் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என விசாரித்தார்.
தொடர்ந்து, 2வது நாளாக நேற்று (அக். 7) செங்கம் அடுத்த சே.அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் விலையில்லா பொருட்களை வழங்கினார். பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட்டுள்ளதா, வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதா என பார்வையிட்டார்.
இந்நிலையில், முதல் நாள் ஆய்வை முடித்துக்கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் திருவண்ணாமலை, தென்மாத்தூர் ஊராட்சி, சுகிழ்நாச்சிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள எழுத்தாளரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரை வீட்டிற்கு சென்றார். எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், கதை சொல்லி, நடிகர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர், விவசாயி எனப் பல முகங்கள் கொண்ட பவா செல்லதுரையை சந்தித்தது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பவாவின் வீடு. நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்! பவா சொல்லும் கதைகளை "பெருங்கதையாடல்" நிகழ்ச்சிகளின் வாயிலாக கேட்டுக்கொண்டே நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வோம். அவர் சொல்லும் கதைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி பவா”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.